வெங்காயத்தை ஒவ்வொரு தோலாக (Layer) உரிக்கும்போது கண்ணீர் மட்டும் வரும். உரித்தபின் மிஞ்சுவது ஒன்றுமில்லை. அதேபோல் சமுதாயம் காட்டிய வழியில் மேலோட்டமாக வாழ்பவர்களுக்கு வாழ்க்கை உரிபடும்போது அழுகையும் வெறுமையுமே மிஞ்சும். புலன்வழி வாழ்வது வாழ்க்கையா? சாப்பிடுதல், சந்ததி பெருக்குதல், சாதல் என்பது எருமை மாடும் செய்கிறதே! இது சாதனையா?
வாழ்வை ஆழமாக உற்றுப்பார்த்தால் அதன் நோக்கம் ஆனந்தமாக வாழ்வது என்பதே விடையாகத் தெரியும். ஆனந்தமாக வாழ்கிறோமா? ஆனந்தத்தை அவரவர் அறிவு நிலைக்கேற்பப் புறப்பொருள்களிலும் மனிதர்களிடமும் தேடி ஏமாந்து விடுகிறோம். ஆனாலும் தேடல் தொடர்கிறது. கவலைகள் அதிகரிக்கும்போது ஏற்படும் மனோ நிலையை மனத்தளர்ச்சி (Depression) என்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் மனோ நிலையை சமநிலை தவறிய தீவிர ஆவல் (Mania) என்றும் இவை மாறி மாறி வரும்போது மூளையில் ஏற்படும் இருபக்க ஒழுங்கின்மை (Bipolar Disorder) என்றும் உளவியல் மருத்துவ விஞ்ஞானம் வகைப்படுத்துகின்றது. எம்மவரில் Depression என்ற மன உளைச்சல் தளர்ச்சியால் வருந்துபவர்களே ஏராளம் பேர் எனப் பல குடும்ப வைத்தியர்கள் கூறியிருக்கிறார்கள்.
பொருளாதார – தொழில் – வருமான நிலை பெரும்பாலும் உடனடியாக உளவியலை நிர்ணயிக்கின்றது என்ற சாதாரண உண்மையை ஏற்றுக்கொண்டால் உலகிலேயே பணக்கார நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கும் எமக்கு அது பொருந்துமா? மன உளைச்சலுக்குக் காரணமான “கவலைகள்” வசதி படைத்த நாடொன்றில் வாழ்ந்து வருபவர்களுக்கு ஏற்படக் காரணமென்ன?
வாழ்க்கை என்பது மனதாலும் புத்தியாலும் ஞாபகத்தாலும் நிர்ணயிப்பதே. வாழ்ந்து பழகிய வாழ்க்கை முறைப் பதிவுகள் இங்குள்ள நிலைகளுக்கேற்ப மதிப்பீட்டுக்குள்ளாகவில்லை. எமது கலாசாரம் என்று சொல்வதே கண்மூடிப் பின்பற்றப்பட்ட ஒன்றாக இன்னும் இருக்கிறதே தவிர தனிமனித அகப்பண்பாகப் பரிணமிக்கவில்லை. நாம் உண்மையில் பண்பாடுள்ளவர்களாக எமது உள்ளத்தில் இருக்கிறோமா? என்ற கேள்வியை ஒவ்வொருவரும் தமக்குள்ளே கேட்டால் உண்மையான பதில் கிடைக்கும்.
இந்துத் தத்துவவியலான வேதாந்தம் இதற்குப் பதிலளிக்கிறது. “விந்தைக்குரிய தெய்வீகமான ஒருவன் பந்த முக்திக்கு அப்பாற்பட்ட பரமானந்த சுகத்தை இங்கேயே அடைவான்” என்கிறது. அதாவது இந்த உலகிலேயே விடுதலைக்கும் கட்டுப்படுத்தலுக்கும் அப்பாற்பட்ட பரமானந்தத்தை தெய்வீகப் பண்புகளைப் பெற்ற ஒரு சில மனிதர்கள் அடைகிறார்கள். ஜீவன் என்னும் கருத்தே பந்தத்தில் அகப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறது. முக்தி என்பது அஞ்ஞானத்தில் தோன்றிய இந்தக் கருத்தை அகற்றுவதுதான். ஆத்மா மாயையான பந்தமுறல், விடுதலை பெறல் ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்டது. இந்த ஆத்மா என்ற உயிர் தெய்வீகத்தன்மை உடையது. பந்தம் என்று நாம் நினைப்பது வெறும் உணர்ச்சி பு+ர்வமானதுதான். உண்மையானது அல்ல. பந்தமுறல், விடுதலை பெறல் ஆகிய எண்ணங்கள் மனதில்தான் காணப்படுகின்றன. ஆன்மாவிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. விளக்குக் கம்பத்தை இருட்டில் பேயாகக் காண்பது பயத்தைத் தோற்றுவிக்கிறது. அது துhண் என்று தெரிந்த உடன் நாம் பேயைப் பற்றிய பயத்திலிருந்து விடுதலையடைகிறோம். பேய்க்காட்சி நம் மனத்தில் ஒரு எண்ணமாகத்தான் இருந்தது. விளக்குத்துhண் பேயாகத் தோன்றிய காட்சி, பேயாக நினைத்த பயம், அது தூண் என்று உணர்ந்தால் பேய் இல்லை என்ற தெளிவு ஆகியவற்றிலிருந்து விடுபட்டு இருக்கிறது.
மனிதன் தன்னை அறிந்து கொள்ளும் போது பரமானந்தத்தை அடைகிறான். அவனுடைய உண்மைத் தன்மையை அறிய இறப்பிற்காகக் காத்திருக்கத் தேவையில்லை. ஆன்மா என்பது எப்போதும் உணரக் கூடியதாக இருப்பதால் இப்போதே இங்கேயே இந்த உடலிலேயே நாம் அதை அடையலாம்.
ஆன்மாவை உணராத அஞ்ஞானம் தான் பிரச்சனைகளை உண்டாக்குகிறது. செயல்கள் அஞ்ஞானத்தை விலக்காது. பேரானந்தத்தை அடைய நாம் நம்முடைய உண்மையான தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். இந்த அறிவு மிக உயர்ந்த தவமான தன்னை ஆராயும்போதுதான் தோன்றுகிறது.
எண்ணத்திற்கு அப்பாற்பட்ட எண்ணம் தோன்றுமிடம் பற்றிச் சிந்திக்க மிக மிக அதிகமான மன ஒருமுகப்படுத்துதல் தேவைப்படுகிறது. ஆகவே ஆத்ம விசாரம், ஆத்ம விளக்கம் என்ற இரண்டும் மிகமிக உயர்ந்த தவங்கள். இவை அகங்காரத்தை வளர்ப்பது இல்லை.
“தனக்குத்தானே ஒளிரும் சுத்த விழிப்புணர்வே அகங்காரம் அற்ற நிலையில் தவமாகிறது” என்கிறார் ரமண மகரிஷி. ஆகவே எல்லாம் வல்ல இறைவனை ரமண மகரிஷி உணர்ந்து களித்த உண்மையை நாமும்; உணர்ந்து கொள்வோம். ஆனந்தத்தை அனுபவிப்போம்!