ஒவ்வொரு மதவாதியும் அவனுடைய வழிபாட்டுத் தலத்தில் மட்டும்தான் இறைவன் இருப்பதாக நினைக்கிறான். பிற மதங்களில், வழிபாட்டுத் தலங்களில் இறைவன் இருப்பதாக அவன் நினைப்பதில்லை. ஆனால் ஒரு உண்மையான இந்துவோ எந்த வழிபாட்டுத் தலத்தையும் கடக்கும் போதும் தன் நெஞ்சில் கை வைத்து அந்த இறைவனுக்கு வணக்கம் செலுத்திச் செல்கிறான். இதுவே அந்த பரந்த தன்மைக்குச் சாட்சி. ஆனால் மற்றவர்களோ பிறசமய வழிபாட்டுத் தலங்களை அசிங்கமாக நினைக்கிறர்கள். சில நேரங்களில் இடித்தும் விடுகிறர்கள். இதைப்போல மூடத்தனம் வேறொன்றும் இருக்க முடியாது. பெரும்பாலான மதவாதிகள் மூடர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு மதவாதியும் தான் வழிபடுவது மட்டுமே இறைவன் என்று நினைக்கிறான். ஒவ்வொரு மதத்துக்கும் ஓர் இறைவனா இருக்க முடியும்?
அப்படியென்றால் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தது யார்? இதை இயக்குவது யார்? இப்பிரபஞ்சத்தை ஒருவன்தான் படைத்திருக்க முடியும். இதை எல்லா மத வேதங்களும் சொல்லுகின்றன. ஆனால் பெரும்பாலான மதவாதிகள் தங்கள் வேதங்களையும் அறியாத மூடர்களாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு மதமும் இறைவனுக்கு ஒரு பெயர் சூட்டியிருக்கிறது. பெயர்தான் வேறு; குறிக்கப்படும் பொருள் ஒன்றே.
“ஒரு நாமம் ஓர் உருவம்
ஒன்றுமிலார்க்கு ஆயிரம்
திரு நாமம் பாடி நாம்
தெள்ளேணம் கொட்டாமோ” என்கிறார் மாணிக்கவாசகர்.
இறைவன் பெயரற்றவன். அதனால்தான் அவனுக்கு ஆளாளுக்கு ஓர் உருவம் கற்பிக்கிறார்கள். மதவாதிகளிடம் மற்றொரு மூடத்தனமும் உண்டு. அவர்கள் தங்கள் ஊரில் தங்களுக்கு அருகிலேயே இருக்கும் தங்கள் தங்கள் மத வழிபாட்டுத் தலத்திற்குச் செல்லாமல் எங்கோ துhரத்தில் இருக்கும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வார்கள்.
கேட்டால் அங்கே இருக்கும் இறைவனுக்குச் சக்தி அதிகம்; மகிமை அதிகம் என்கிறார்கள். இவர்கள் ஊரில் இருக்கும் இறைவன் வேறா? வேற்று ஊரில் இருக்கும்; இறைவன் வேறா?
இறைவனுக்கு ஓரிடத்தில் சக்தி அதிகமானதாகவும் ஒரிடத்தில் சக்தி குறைவாகவும் இருக்குமா? இது அப்பட்டமான மூடத்தனம். மூடர்களுக்கு உள்ளிருக்கும் இறைவன் அகப்பட மாட்டான். மதவாதிகளை விட நாத்திகர்களே மேல். நாத்திகர்கள் இறைவனை அறியாதிருக்கிறார்கள். இவர்களோ இறைவனைத் தவறாக அறிந்து வைத்திருக்கிறார்கள். அறியாமையைவிடத் தவறான அறிவு ஆபத்தானது. நாத்திகர்கள் வழிபாட்டுத் தலங்களை இடிப்பதில்லை. ஆத்திகர்களே இடிக்கிறார்கள்.
“அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூ ர்த்தியாகி அருள் நிறைந்த” பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட கட்டடத்தில்தான் உள்ளதாகக் கருதுபவன் அந்தப் பரம் பொருளின் சர்வ வியாபகத் தன்மையை அறியாதவனாக இருக்கிறான்.
தாயுமானவர் பூ ஜை செய்வதற்குப் பூ எடுக்கச் சென்றார். பூ வைப் பறிக்கக் கையை நீட்டியபோது பூ வில் இறைவனைத் தரிசித்தார். அவருக்கு ஞானம் கிடைத்துவிட்டது. பூவிலேயே இறைவன் இருக்கும்போது அந்தப் பூவைப் பறித்துப் பூசை செய்தேனே! என்ன அறியாமை; இனி அப்படிச் செய்யமாட்டேன்! உறுதி கொண்டார்.
தாயுமானவர் ஞானிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கண்ட இடம் எல்லாம் கடவுள் மயம் என்றறிந்து கொண்ட நெஞ்சர்” என்கிறார். எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான் என்று நினைப்பவன் மற்ற மதத்தவரைப் பகைப்பானா? எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான் என்று நினைப்பவன் மனிதரில் ஒரு பிரிவினரைப் பார்த்து, “நீ கீழ்ச்சாதி, உன்னைத் தொட்டால் தீட்டு என்பானா? அந்த மனிதர்களுக்குள்ளும் இறைவன் இருக்கிறானே! எல்லா மதமும் அன்பே கடவுள் என்கின்றன. சக மனிதனை நேசி என்கின்றன. ஆனால் உலகத்தில் நடந்த சண்டைகளிலேயே மதச் சண்டைகள் தான் அதிகம் என்று சரித்திரம் சொல்கிறது.
இதிலிருந்து தெரிவதென்ன? பெரும்பாலான மதவாதிகள் தங்கள் மதத்தைப் பின்பற்றுவதில்லை. இவர்கள் உள்ளே எதுவும் இல்லாமல் வெறும் “லேபிள்” ஒட்டிய வெற்றுப் பாத்திரமாகவே இருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் கடவுளின் பக்தர்கள் அல்லர் கடவுளின் பகைவர்கள் – மனித இன விரோதிகள்.
உயிர் நேயமே இறைவனைத் தரிசிக்கும் கண்ணாகும். பகைமை என்ற கத்தியால் அதைக் குத்திக் கொல்பவர்கள் இறைவனை எப்போதும் தரிசிக்க முடியாது. இந்த உண்மையை – கருணையின்;றித் தரிசிக்க முடியாது.