இயற்கையை ரசிக்கின்ற தன்மை உங்களிடம் இருக்கிறதா? குளிர் வாட்டி எடுக்கிறது என்றாலும் கொட்டும் பனியின் அழகையும் அதன் தூய்மையையும் மனதில் ஆனந்தம் பொங்கக் கண்கொட்டாமல் பார்த்து ரசித்திருக்கிறீர்களா? இலைகளை உதிர்த்து மொட்டையாக நிற்கும் மரங்களிலே முத்துக்களாலும், மல்லிகை மொட்டுக்களாலும் சரம் கோர்த்து அலங்கரித்திருப்பதைப் போல் பனிக்கட்டிகள் சிறிதும் பெரிதுமாகக் கோலம் காட்டும் எழிலை நீங்கள் நின்று நிதானித்துக் கண்டிருக்கிறீர்களா? குளிர் காலத்தில் நமக்கு ஏற்படும் குறைபாடுகளைச் சொல்லிக் குளிரையும் பனியையும் திட்டியிருக்கிறீர்களே தவிர ஓரிடம் பாக்கி இல்லாமல் வெண்மை நிறம் பிரகாசித்து நகரத்தையே வௌ;ளி நகர மாகக் காட்டுகின்ற கவின்மிகுக் காட்சி உங்கள் கவனத்தைக் கவர்ந்திருக்கிறதா?
குழந்தைகள் பனியை ரசிப்பதைப்போல் நாம் ரசிப்பதில்லை. சிறுவர் சிறுமியர் பனி உடுப்புக்களைப் போட்டுக் கொண்டு அந்தப் பனியில் உருண்டு புரண்டு பனிக்கட்டிகளை ஒருவருக்கொருவர் வீசி எறிந்து இயற்கையோடு இயற்கையாக விளையாடி மகிழ்கின்றனர். வெப்ப நாடுகளில் வாழ்ந்த நாம் அங்கு வெயிலையும் ரசித்ததில்லை, இங்கு இந்தப் பனியை யும் ரசிப்பதில்லை. இயற்கையின் மாற்றங்கள் மனிதர்களால் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் அந்த மாற்றங்களை நாம் எப்படி எடுக்கிறோம் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது.
எனது குருநாதர் சுவாமி சின்மயானந்தர் ரிஷிகேஷில் மழை, பனித்தூறல் ஆகியவற்றிற்கிடையே நடந்து செல்லும்போது, ஐவள ய டிடநளளiபெ கசழஅ வாந hநயஎநn என்று சொல்வார். இயற்கை சக்தி இங்கு பனியாகப் பெய்து மூடாவிட்டால் கனடாவில் இயற்கைவளம் இருக்காது. இங்குள்ள சகல வளங்களுக்கும் இந்த இயற்கை அமைப்புத்தான் காரணம். எனவே இயற்கையை ஆராதியுங்கள். அதன் அழகைக் கொண்டாடிப் போற்றுங்கள். கொட்டும் பனியின் அழகைக் கண்டு ரசிக்கப் பழகுங்கள். கனடியர்கள் இந்தக் குளிரையும் பனியையும் ஏற்று, இதற்குள்ளேயே விளையாடிக் களிக்கின்றார்கள். அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழவும் பொழுது போக்கவும் கற்றிருக்கிறார்கள்.
நமக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களில் இயற்கையை ரசிப்பதும் அதனை உவந்து ஏற்பதும் ஒன்றாக இருக்கட்டும். ஆர்க்டிக் பகுதிக்குப் பக்கத்தில் கனடா இருப்பதால் இது ஒரு பரிசுத்தமான இடம். அங்கிருந்துதான் வளையம் வளைய மாகக் குளிர் பரவுகின்றது. இந்தக் குளிர் மிகச் சுத்தமானது. சுற்றுச் சூழல் மாசுபடாத விதத்தில் இங்கு நல்ல காற்றுக் கிடைக்கிறது. இந்தத் தூய்மையான இயற்கைச் சூழல், மக்களுக்கு நீண்ட ஆயுளைத் தருகின்றது. கனடா ஒரு மனிதாபிமானம் மிக்க, இயற்கை செல்வம் நிறைந்த பூமி என்றே சொல்லலாம்.
ஓர் உபநிஷதம் சொல்கின்றது, ‘நான் விடுகின்ற காற்றைத் தான் நீ சுவாசிக்கின்றாய்’ என்று. யாருடைய காற்றை யார் சுவாசிக்கின்றோம்? என்று யோசித்துப் பாருங்கள். காற்றும் பிரம்மமும் ஒன்று. எல்லா உயிரினங்களும் தாவரங்களும் விடுகின்ற காற்றைத்தான் நாம் சுவாசிக்கின்றோம். ஒரு புற்று நோயாளியின் சுவாசமும் என் சுவாசத்தில் கலக்கின்றது. நமக்கென்று தனியாகக் காற்று வருவதில்லை. எப்படி ஆத்மா என்ற பெயரில் உயிர் எனக்குள் இருப்பது எனக்குத் தெரியாதோ, அதுபோல் காற்று எனக்குள் போய் வருகின்ற விதமும் எனக்குத் தெரியாது. தாவரங்கள் நாம் விடுகின்ற நச்சுக் காற்றைத்தான் இழுத்து ஆக்ஸிஜனை வெளியிட்டு நமக்குக் காற்றைச் சமநிலையாக்கி நன்மை செய்கின்றன. இப்படிப் பலவிதங்களில் இயற்கை நமக்கு உதவிக் கொண்டிருக்கிறது. ஆத்மாதான் எல்லாவற்றிற்குள்ளும் உயிராக இருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
எல்லாம் கலந்ததான காற்றைத்தான் நீ உயிர் வாழ்வதற்காகச் சுவாசிக்கிறாய். உன் படிப்புக்கும் பதவிக்கும் வசதிக்கும் ஏற்றபடி உனக்குத் தனிக்காற்று சுவாசமாவதில்லை. பன்றி விடும் மூச்சையே நீ திரும்ப இழுக்கிறாய். பிறகு உனக்கு ஏது தனித்தன்மை? நாம் நம்மை மிக உயர்ந்த நிலையில் வைத்து உயர்வாக நினைத்து வாழ்ந்தாலும் இதுவே உண்மையான என்னை விளங்கிக் கொள்ள மிக அருமையான சிந்தனை. எல்லாமே ஒன்று. பொய்யாக எல்லாம் பேதப்பட்டு நிற்கின்றன. இயற்கையின் சமத்துவத் தன்மையை விளக்கும் “மண் குடிசை வாசல் என்றால் தென்றல் வர மறுத்திடுமா? மாலை நிலா ஏழை என்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா? உனக்காக ஒன்று, எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுப்பதில்லை” என்ற கவிஞர் வாலியின் இந்தப் பாடல் வரிகள் ஆழமாக சிந்திக்கத் தகுந்தவை. இயற்கையின் ஊடாக பிரம்மம் எப்படி அணைக்கிறது என்பது தெரியாமல் நாம் வாழ்கிறோம்.
Time Line என்ற ஒரு காலக்கணக்கு மூன்று விதத்தில் நமக்குள் இருக்கின்றது. ஒன்று சாதாரணமாக மூளை வேலை செய்கின்ற time line. ஆத்மாவோடு நான் இயங்குகின்றபோது time line அதுவே மாற்றுகிறது. வருடத்திற்கு இரண்டு முறை இந்த நாட்டில் வுiஅந டுiநெ மாறுவது என்பது மூன்றாவது time line. எனது ஆத்ம உயர்விற்கு ஏற்றபடி 2 வித timelineஐ எனக்குள் ஆத்மா மாற்றியமைக்கிறது. அதாவது மரபணுக்களின் வழியாக வந்த சிந்தனை இல்லாமல் நான் உண்மைப் பக்கம் சார்ந்து சிந்திக்க முற்படும்போது எனது உள்நோக்கம் மாற்றியமைக்கப்படுகிறது. அந்நிலையில் நேரம் போவதே நமக்குத் தெரிவதில்லை. நேரத்தை ஆத்மா மாற்றியமைக்கிறது. ஆழ்ந்த தியானத்திலோ ஆன்மீகப் பயிற்சிகளிலோ நாம் ஈடுபட்டிருக்கும்போது நேரம் போவதே தெரியாமல் பறந்துவிடும்.
உங்களது நாளாந்த அலுவல்களில் நேரம் உங்களை விட்டு விலகிச் சென்றதுண்டா? உங்களை நேரம் தவறவிட்டதுண்டா? செய்கிற செயல்களில் ஆழ்ந்த கவனத்துடன் ஈடுபட்டிருந்தால் நேரம் போவது தெரியாது. இந்த ஆழ்ந்த ஈடுபாடு தியான நேரத்தில் ஏற்பட்டதுண்டா? பூரண அமைதிதான் உங்களை ஆழமான நிலைக்குக் கொண்டு செல்லும். எதைச் செய்ய நீ முயல்கிறாயோ அங்கு உன் கர்மா வேலை செய்யும். எதை அது செய்யுமென்று விட்டாயோ அங்கு கர்மா வேலை செய்யவில்லை. அங்கு அதனுடைய கருணை மட்டும்தான் வேலை செய்யும்.
சும்மா இரு என்று சொன்னால் உங்களால் சும்மா இருக்க முடியுமா? அதையும் மறந்து இதையும் மறந்து பூரண நம்பிக்கை அதன்மேல் வைத்து எனக்குத் தேவை என்றால் அது செய்யும் என்று சும்மா இருக்க முடியுமா? உன்னில் நம்பிக்கை, நீ அதன் மீது வைத்த நம்பிக்கை, அதற்கும் உனக்கும் தொடர்பை ஏற்படுத்திய ஞானத்தில் நம்பிக்கை என்று உனது நம்பிக்கை மூன்று கோணங்களில் அமைய வேண்டும்.
நீ இறந்து போனாய்! என்று குரு சொன்னால் உன்னால் உடனடியாக இறந்து போகமுடியுமா? நான், இந்த இடம், இந்த ஆட்கள் போன்ற எதுவுமே இல்லாமல் முழு ஜடமாக உன்னால் ஆக முடியுமா? முடியாது, ஏனெனில் நீயே உன்னைத் தொந்தரவு செய்கிறாய். சரியான ஞானம் செயல்பட்டால் எதுவுமே எனக்குச் சொந்தமில்லை. இப்போதே என்னால் அனைத்தையும் துறந்து ஜடமாகிவிட முடியும் என்று சொல்ல முடியும். அப்படிச் சொன்னவர்கள் இருக்கிறார்கள். உங்களால் இப்போது அப்படிச் சொல்ல முடியாவிட்டாலும் அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் அந்த நிலையில் நான் எப்படி இருப்பேன் என்று கற்பனை செய்து பாருங்கள். அப்படிப்பட்ட அந்த நிலையில் உன்னால் அத்தனையையும் விட்டுவிட்டுப் பேசாமல் இருக்க முடியுமா? ஏனென்றால் பிறவிகள் தோறும் எல்லாம் உன்னை வந்து சேர்ந்தவை. இவை அனைத்தையும் விட்டு உன்னால் மரணித்த நிலையில் இருக்க முடியுமா? ஆழம் விளங்குகின்றதா? ஒரு தூசு துரும்புகூட உங்கள் மனதில், எண்ணத்தில், நினைவில் ஒட்டியிருக்கக்கூடாது.
உன்னை வெறுமையாக்கிக் கொள்ள முடியுமா? வீடு, வாசல், திட்டங்கள், அனுபவித்தவை, இந்த உலகம் அனைத்தையும் விட்டு உன்னால் மரணித்த நிலையில் இருக்கமுடியுமா? சவாசனம் என்று ஓர் ஆசனம் யோகாவில் இருக்கிறது. சவம் மாதிரிக் கிடத்தல்தான் சவாசனம். நம்மை சவாசனத்தில் கிடத்துவதுதான் நித்திரை. தினமும் இரவில் நித்திரை கொள்வது தற்காலிக மரணம்தான். ‘நான்’ என்பது சாக வேண்டும். அந்த நானோடு சேர்ந்தவையெல்லாம் செத்து சவாசனத்திற்குப் போ என்று சொல்கிறேன். கற்பனையாக மரணத்தை அனுபவித்திருக்கிறீர்களா? நாளாந்த வாழ்க்கையில் ‘நான்’ என்பது செத்து வாழ்பவன் ஞானி. எல்லாவற்றையும் ஏற்றி வைத்திருப்பவன் சம்சாரி. எல்லாவற்றையும் துறந்தவன் ஞானி. எது அலைக்கழிக்கின்றதோ அது சம்சாரம்.
இயற்கை இறுதிநிலையில் நம்மை எல்லாவற்றையும் துறக்கச் செய்கிறது. துறவி என்பது மனத்தால் அனைத்தையும் துறந்து வாழ்வது. உலக விவகாரங்களையும் குடும்பப் பிரச்சனைகளையும் மனதில் சுமந்து தவித்தால் அது கடைசியில் மாரடைப்பில்தான் கொண்டுவிடும். இதையெல்லாம் புரிந்து கொண்டு செத்த நிலையில் வாழத்தான் இந்த வேதாந்தம். இந்த நிலையில் ஓர் இல்லறத்தானால் இருக்க முடியாது என்று சொல்லலாம். ஞானம் பெற்றபின் மனைவி என்பவள் என் வாழ்க்கைத்துணை, பிள்ளைகள் எனக்கு மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தர வந்தவர்கள், அவர்களது குற்றங்குறைகள் எதுவும் என்னைப் பாதிக்காது என்று ஆழமாகச் சிந்தித்து உணர்ந்து வாழ்ந்தால் இல்லறத்தானும் செத்த நிலையில் சுகமாக வாழலாம். எனக்குக் கிடைத்தவை எல்லாம் எனக்கு இன்பம் பெறவும், அன்பு செலுத்தவும் வாய்த்தவை. இடைப்படும் துன்ப துயர நிகழ்வுகளெல்லாம் கர்மாவும் மாயையும் செய்பவை. இந்தப் பார்வை மாற்றம் நம்மில் ஏற்பட்டால்தான் அந்த நிலையை எட்ட முடியும்.
மரணத்தைப்பற்றி எல்லோரும் பயப்படுகிறார்களே தவிர, அதன் உண்மைத் தன்மையை யாரும் ஆராய்ந்து பார்ப்ப தில்லை. உண்மையில் மரணம் அழகானது. உடல் துன்பங் களிலிருந்து விடுபடுவது. மரணத்தில் பஞ்சமில்லை, நோயில்லை, இன்ப துன்பங்கள் இல்லை. வாழ்க்கையில் இருந்து நம்மை விடுவிப்பது மரணம். ஞானத்தால்தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். நடைமுறைகளை ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் அப்போதுதான் ஏற்படும். நாம் தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருநாளும் செத்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
நான் உங்களை மனத்தால்தான் சாகச் சொல்கிறேன். இப்போது மனதால் தானே நாம் வாழ்கிறோம். பிறக்கும்போது மனமில்லை, மனம் செத்த நிலையில்தான் இருந்தது. அதுதான் சித்தநிலை. வளரவளர உங்களது கர்ம மூட்டை களும் இங்கு வாழ்ந்து பெற்றவையும் சேர்ந்து மனம் நிரம்பி வழிகின்றது. அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கின்றீர்கள். உங்கள் உடல்பாரத்தைவிட மனப்பாரம்தான் அதிகமிருக்கிறது. மனப்பாரத்தை நீங்கள்தான் ஏற்படுத்தினீர்கள். மிக அழகான உலகம், அற்புதமாக நமக்காக அளிக்கப் பட்டிருக்கிறது. அதை அனுபவிக்காமல் என்னுடைய கர்மாவால் எனக்கு ஏற்பட்ட துன்பத்தை வைத்துக் கொண்டு நான் தொடர்ந்து துன்பமாகவே இருப்பது புத்திசாலித்தனமா? யோசியுங்கள்.
எந்த அளவிற்கு நான் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்கின்றேனோ அந்த அளவிற்கு மன நிம்மதியை அனுபவிக்கலாம். ஆழ்ந்த தியானம் கைவரப் பெற்றால் ஆழ் நித்திரை ஏற்படும். ஆழ் நித்திரையில் நான் இருந்தேன் என்பதை எனக்கு அறிவிக்க மூன்றாமவன் எனக்குள் இருக்கிறான். அவனைத்தான் நாம் தேடுகிறோம். அவனே ஆத்மா. நீ செத்துப் போனாலும் உனது நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கு அவன் இருக்கிறான். அவன் எனக்குச் சொந்தமில்லையென்று நீ நினைத்தாலும் உனக்கு உற்றதுணை அவனே. அவன்தான் நீ. என்னை விபத்துக்களிலிருந்தும் விஷங்களிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் காப்பாற்றுபவன் அவனே. அவன் என்னிடம் காட்டுகின்ற கருணையை ஏற்று நான் பிறரிடம் கருணை காட்டுகிறேனா? இப்படி மரணத்தின் தன்மையை அறிந்துகொண்டு சாவதற்குத் தயாரான நிலையில் இனி நீங்கள் வாழ வேண்டும்.
அப்படியென்றால் தற்கொலை செய்து கொள்பவர்களின் மன நிலை என்ன? என்று நீங்கள் கேட்கலாம். அது தெளிந்து எடுக்கும் முடிவல்ல, ஒரு பிரச்சனையைச் சந்திக்க முடியாத நேரத்தில் உடனடியாக எடுக்கின்ற ஒரு முடிவு. அதில் ஆத்மா விடுபடாது. மேலும் கேவலமான ஒரு பிறவியை அது எடுக்கும். வெறும் கோபத்திலும் பச்சாதாபத்திலும் தன்னால் இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாது என்னும் பிழையான எண்ணத்திலும் எடுக்கப்படுகின்ற முடிவே, தற்கொலை செய்து கொள்வது. இயலாமையே அதற்குக் காரணம். ஒருவர் தனது வாழ்க்கையை வெறுப்பினால் துறந்து துறவை மேற்கொள்வதும் தற்கொலை போன்றதுதான். வாழ்க்கையின் அர்த்தத்தை வாழ்க்கை பற்றிய உண்மைகளைத் தெளிவாக முழுமையும் விளங்கிக் கொண்டு வாழ்க்கையிலிருந்து விலகி நின்று ஞானத்தால் மேற்கொள் கின்ற துறவுதான் உண்மையான துறவு. மாறாக வாழ்க்கை யில் ஏற்பட்ட ஏதோ ஓர் இழப்பினால் அல்லது வெறுப்பினால் மேற்கொள்கின்ற துறவு உண்மையானதல்ல.
ரிஷிகேஷில் நான் சந்நியாசப் பயிற்சியில் ஈடுபட்டு ஆசிரமத் திலிருந்தபோது சேலத்து சுவாமி ஒருவர் தமிழில் பேசுவதற் காக அடிக்கடி என்னிடம் வந்து உரையாடுவார். அவர் பெரிய பணக்காரர், பல மில்களுக்குச் சொந்தக்காரர், அவரது மனைவி பிள்ளைப்பேற்றில் இறந்து விட்டார். துக்கத்தை வெல்லமுடியாமல் எல்லாவற்றையும் உதறிவிட்டு சுவாமியாக அங்கு வந்துவிட்டார். இருந்தாலும் அவர் பேச்சு எப்போதும் கடந்தகால வாழ்க்கை பற்றியதாகவே இருக்கும். அவர் மனமோ தனது மில்லிலேயும் கோடிகளிலும் தன் மனைவி யிடமுமே இருந்தது. இதைக் கவனித்த நான் அவரிடம் இவை எல்லாவற்றையும் விட்டுத் திரும்பிப்போய் உங்கள் விவகாரங்களையெல்லாம் ஒழுங்கு செய்துவிட்டு வாருங்களேன் என்று சொன்னேன்.
ஆத்திரம், அவசரத்தில் சந்நியாசம் எடுப்பது உண்மையான சந்நியாசம் அல்ல. அது வாழ்க்கையை விட்டு ஒளிந்து ஓடுவது. இதைவிட இல்லறத்தில் இருந்தபடியே எல்லாம் செய்துகொண்டு பற்றின்றி வாழ்வது சிறந்தது. இதுபற்றிச் சிந்தியுங்கள். இப்பொழுது உபநிஷத்தில் உபதேசிக்கப்படும் இரண்டு முக்கிய கருத்துக்கள் என்ன என்று பார்ப்போம். ஒன்று பிரம்மம், சத்தியம். இரண்டாவது ஜகத் மித்யம் (பொய்யானது). உலகம் முழுவதுமே வெறும் தோற்றம் என்ற கருத்தைத் தியானிப்போம். வெளி உலகச் சூழல் மாற்றத்திற்கு உட்பட்டது, நித்தியமில்லாதது, நிலையற்றது என்று தியானிப்போம். இந்த உண்மையை நன்கு அறிந்து கொள்வோம். இனி உடலுக்கு வருகிறோம். உடல் அன்னமய கோசமென்ற ஸ்தூல சரீரம். இந்த உடலைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் மனதில் பார்த்து, இந்த உடலின் வயதைச் சிந்தியுங்கள். அவரவரும் தங்களின் இந்த உடல் ஐந்து வயதில் எப்படி இருந்தது என்று கற்பனை செய்யுங்கள். இதே உடல் இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு எப்படி இருக்கும் என்று நினையுங்கள். அதற்கு மேலும் 50 வயதில் 80 வயதில் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஒரு கட்டத்தில் இந்த உடல் இருக்கப்போவதில்லை. இந்த உடலின் மரணம் தியானத்திற்கு முக்கிய விஷயம். இந்த உடலை வைத்துக் கொண்டு நாம் ஞானம் சேகரிக்கிறோம். ஆனால் இந்த உடல் எதிர்காலத்தில் இல்லாமற் போகக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. பூரண ஞானம் விளங்குகிறதா? இதுநாள் வரை இந்த உடலை வைத்துத்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த உடலே ஒரு காலத்திற்குப் பின் இல்லாமற் போய்விடும் என்பது உண்மை.
நம்மோடு உள்ளவை எல்லாமே இந்த உடலோடு மட்டுமே சம்பந்தப்பட்டவை. இந்த உடலின் மரணத்தைத் தியானிக்கும் போது இந்த உடலின் நிலையாமை புரிந்து உடல்பற்று குறைந்துவிடும். மரணம் அமங்கலமல்ல, மங்களமானது. பழைய உடை அகற்றிப் புது உடை அணிவது மங்கள மானது. மரணம் மங்களமான நிகழ்ச்சி, காரணம் இந்த உடல் நாம் அணிந்திருக்கும் ஆடை போன்றது. நம்மால் அனுபவிக்கப்படும் அநாத்மா (ஆத்மா அல்லாதது) உடலும், உலகமும் ஆகும். உடலும் உலகமும் பொய்தானே. இப்போது நம் மனதில் நிற்பவை பொய்யான இந்த உடலும் உலகமும்தான். அப்படியென்றால் நாம் பொய்யில் வாழ் கிறோம் அல்லவா?
இதுவரை உலகத்தின் நிலையாமையைத் தியானித்தோம். நம் தூல உடலை மனக்கண்முன் நிறுத்தி இந்த உடலின் நிலையாமையைத் தியானித்தோம். இந்த உடல் சில காலங்களுக்குப் பிறகு இருக்கப் போவதில்லை. எரிந்து சாம்பலாகவோ அல்லது மண்ணோடு மண்ணாகவோ கலந்துவிட இருக்கிறது. மரணம் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி. அந்த மரணம் இந்த சரீரத்திற்குத்தான். ஒரு கற்பனை; எனது உடல் மரணம் அடைந்து விட்டது. என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்னை எப்படிப் பார்ப்பார்கள்? சூட்சுமமாக இருக்கின்ற நான் யாருக்கும் தெரியாமல் என் உடலைப் பார்க்கின்றேன். சிலர் கதறி அழுகிறார்கள், சிலர் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள், சிலர் வருத்தத்தைக் காட்டுகிறார்கள். எனது மரணம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வைக் கொடுக்கிறது.
எனது மரணத்திற்குப் பிறகு எல்லாம் சீராகவே நடைபெறு கிறது. சில வருடங்களுக்குப் பிறகு என்னை நினைப்பவர்கள் யாருமில்லை. பரந்த உலகில் எனது மரணம் ஒரு முக்கிய விஷயமில்லை. இப்படிப்பட்ட மரணத் தியானம் எனது வைராக்கியத்திற்கு ஒரு விதை. மரணத்தைத் தியானிக்கும் போது நிலையாமையில் நிஷ்டையை அடைவோம். பெரிய சிறிய பற்றுக்கள் விலகுவதை அறிவோம். பற்றுக்கள் விலகப் பிறவியில்லாமற் போகும்.
தொடர்ந்து நாம் நமது உடலின் நிலையாமையைத் தியானித்து வருகின்றோம். மரணம் தவிர்க்க முடியாத நிகழ்ச்சி. மரணத்தை மறந்து விடுவதனால்தான் நமதுமனம் அநித்தியமான பொருள்களுக்குச் சண்டையிடுகின்றது, போட்டி யிடுகின்றது, பொறாமைப்படுகின்றது. மரணத்தை மறப்பதால் ஆபத்தில் ஈடுபடுகின்றோம். காலை எழுந்திருக்கும் பொழுது இன்று மாலை எனது மரணம் என்று நினைத்துக் காலையில் இருந்து மாலைவரை செயல்படுவாயாக. மரணத்தைச் சிந்தித்துக் கொண்டே இருக்கப்பழகினால் ஆசையே மனதில் எழாது. மனதில் ஏற்படுகின்ற ஏற்ற இறக்கங்கள்தான் உடலில் வருத்தங்களாக வருகின்றன.
இந்த நாள்தான் எனது கடைசி நாள் என்று கற்பனை செய்து இந்த நாளைப் பயன்படுத்தப் பழக வேண்டும். இப்படி நினைத்துச் செயல்பட்டால் நாளைக்கு என்ற எண்ணமே எழாது. மிக அக்கறையாகக் கவனத்துடன் அனைத்தையும் செய்து முடிக்கத் தோன்றும். இக்கற்பனை ஒருநாள் உண்மையாக ஆகலாம். எனவே இந்த வாக்கியத்தைத் தியானித்து அமர்ந்திருப்போம். மரணத்தைப் பற்றித் தியானித்தோம். இனி நாம் உடலுக்கு வருகின்ற நோயைப் பற்றித் தியானிப்போம். எவன் ஒருவன் தனது நோயைப் பற்றிச் சிந்திக்கவில்லையோ அந்த நோய் அவனது உடலை விட்டு நீங்கும். நோயை வைத்திருப்பது மனம். அதை ஒதுக்கித் தள்ளிவிட்டுச் சிந்திக்காமலே இருந்தால் நோய் நீங்கிவிடும். ஐயோ எனக்கு இப்படி வந்துவிட்டதே என்று சதா அதையே நினைத்திருந்தால் நோய் பெருகும். எவன் ஒருவன் தன் நோயைப்பற்றிச் சிந்திக்காமல் இருக்கிறானோ அவனுக்கு அந்த நோயால் துன்பமில்லை என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார்.
மரணத்தைப் பற்றித் தியானித்த நாம் இப்போது நம் உடலுக்கு வருகின்ற நோயைப்பற்றி ஆராய்ந்து பார்க்கின் றோம். ஒரு கற்பனை. நம் உடலுக்கு ஒரு நோய் வந்து விட்டது. மருத்துவப்படி நாம் வாழப்போவது இன்னும் சில மாதங்களே என்பது தெரியவருகிறது. சில மாதங்கள் மட்டும் இந்த உடலுடன் நாம் இருக்கமுடியும் என்ற நிலமை ஏற்பட்டு விட்டது. நம் உடலை நாம் பார்க்கிறோம். என்னென்ன மாற்றங்கள் நம் மனதில் வரும்? எனது மரணத்தின்மீது எனது பாவனை எப்படி மாறும்? நான் வைத்திருக்கும் பணத்தின் மீது என் பாவனை எப்படி மாறும்? எனக்கு நன்மையையும் இன்பத்தையும் கொடுத்தவர்களிடம் எனது உணர்வு எப்படி இருக்கும்? சங்கடம் கொடுத்தவர்களிடம் பாவனை எப்படி இருக்கும்? பிறப்பு, உழைப்பு, உறவினர், நண்பர்கள் எதிரிகளை எல்லாம் நான் இப்போது எப்படிப் பார்ப்பேன். இந்தப் பாவனை நமக்குப் புதிய அறிவையும் உணர்வையும் கொடுக்கும். நான் இருக்கப் போகின்ற குறுகிய காலத்தில் எதைத் தேடுவேன் எதை ஒதுக்குவேன் என்று பார்க்கவும். இந்தச் சிந்தனை நிலையாமை பற்றிய அறிவைத் தந்து மன உறுதியை ஏற்படுத்துகின்றது.
மரணத்தைப் பற்றி நன்கு சிந்தித்துப் பார்த்தபின் வருகின்ற எந்த நோயையும், ஏற்படுகின்ற எவ்வளவு பெரிய பிரச்சனை யையும் ஏற்றுக் கொள்கின்ற தன்மை எனக்குள் ஏற்பட்டுவிடும். ஞானம்தான் அனைத்துத் துன்பங்களையும் வெல்லக்கூடிய சக்தி. முக்தியைத் தேடுகின்ற பயிற்சியில் மரணத்தைப் பற்றிய சிந்தனை தவிர்க்க முடியாத ஒன்றாகும். மரணத்தைச் சரியாகப் புரிந்துகொண்டபின் மனம் தெளிந்து ஆத்மாவாகி விடும்.
அன்றாட வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அவற்றை எதிர்கொண்டு அடிபட்டு அடிபட்டுப் பக்குவப்படத்தான் வேண்டும். சும்மா ஒன்றுமில்லாமல் ஹாய் என்று வாழ்ந்துவிட்டுப் போவது வாழ்க்கையல்ல. பிரச்சனைகளால் மனம் வெறுக்க வேண்டும். பற்றறுப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அனைத்தையும் துறந்த நிலைக்குப் போக நாம் வாழுகின்ற முறைதான் செலுத்திச் செல்லும். உழுது கிளறப்படும் நிலம்தான் அதிக விளைச்சலைக் கொடுக்கும். ஆலையில் சிக்கிய கரும்புதான் சாறாக இனிக்கும். ஒருவனுக்குக் கிடைத்த தோல்விகளும் அவமானங் களும்தான் அவனது மனநிலையைப் பற்றின்றிச் செயல்படும் பக்குவத்திற்குக் கொண்டு செலுத்தும். மாறாகப் பழிவாங்கும் மனப்போக்கு ஏற்பட்டால் அது அவனைக் கீழ் நிலைக்குத் தள்ளி அழிவை ஏற்படுத்திவிடும்.